1045. இன்னும் என்னை என்ன செய்யப் போகிறாய்?
கமல்ஹாஸனின் படங்கள் மதுரையில் எப்போதும் A.A. ரோட்டிலிருக்கும் - மாப்பிள்ளை விநாயகர் தியேட்டரிலிருந்து திண்டுக்கல் போகும் ரோட்டிற்கு பக்கத்து ரோடு - ஆரப்பாளையம் அருகில் - மதி தியேட்டரில்தான் வெளியாகும். என் நண்பன் மால் (முழுப் பெயர்: சாலைச் சிவமால்) அதே ரோட்டில் பலசரக்குக் கடை பரம்பரையாக நடத்திக்கொண்டிருந்தார்கள். முதல் நாள் முதல் காட்சிக்கு டிக்கெட் வாங்கி வைத்திருந்தாலும் திரையை மறைத்து விழும் பேப்பர் துண்டுகள், தீபாராதனை, ஓயாத விசில், இரைச்சல் இவற்றையெல்லாம் தாண்டி படம் பார்ப்பது இயலாது என்பதால் எப்போதாவதுதான் முதல்காட்சிக்குப் போவேன். பெரும்பாலும் படம் வெளியாகி ஒருமாதம் கழித்துத்தான் பார்ப்பது வழக்கம்.
சிங்காரவேலன் வந்து ஆரம்ப ஆரவாரங்கள் அடங்கியதும் ஒரு மாதம் கழித்துப் போனேன். நகைச்சுவைப் படங்கள் கமலுக்கு அல்வா சாப்பிடுவதுமாதிரி. சிங்காரவேலனும் விதிவிலக்கல்ல. கவுண்டமணி, மைக்கேல் ஜாக்ஸன் தங்கச்சி வடிவேலு, மனோ என்று கும்பல்சேர்ந்து அவர் அடிக்கும் அட்டகாசம் தியேட்டரையே ரெண்டு படுத்தியது. படம் ஆரம்பித்ததும் சிரிக்க ஆரம்பித்தவன் ஒரு கட்டத்தில் நிறுத்த முடியாமல் இருக்கையிலிருந்து எழுந்து வெளியே ஓடிவந்து சிரித்துமுடித்துவிட்டு உள்ளே சென்று அமர்ந்தேன். இப்படியே பலமுறை நடந்தது.
வெண்கலக்கடையில் யானை புகுந்த கதைமாதிரி பல காட்சிகள் வயிறுவலிக்கச் சிரிக்கவைப்பவை. நகைச்சுவை என்றால் வயதுவந்தவர்களுக்கான நகைச்சுவை. ஜட்டி மட்டும் போட்டிருக்கும் சிறுமியின் படத்தை கணிணியில் காட்டி பத்து வயசில் இப்படி... பதினைந்து வயதில் இப்படி என்று குடுமிவைத்த தாத்தா சொல்லிக்கொண்டே வர கூட்டாளிகளின் ஜொள்ளுப் பார்வையைக் கவனிக்கும் கமல் சட்டென்று “சார். கொஞ்சம் ட்ரெஸ்ஸூ போட்டு காமிங்க சார்” என்பார் பதட்டமாக. பிறகு குமரியாக புஷ்டியை.... ஸாரி.. குஷ்புவைக் காட்ட... குஷ்பு ஸீனில் எண்ட்ரி ஆவார். அந்தத் தாத்தாவை கவுண்டர் வழுக்கை மண்டையில் லொட் என்று குட்டி கலாய்ப்பார்.
கிராமத்திலிருந்து புறப்பட்டு கருவாட்டுக்கூடையோடு மனோவைத் தேடி சென்னைக்கு வந்திறங்கும் கமலை ஆட்டோக்காரர்கள் போட்டி போட்டு மொய்ப்பதும், கருவாட்டு நாற்றம் தாங்க முடியாமல் எல்லாரும் தலைதெறிக்க ஓடிவிட கடைசியாக ஒருவர் மட்டும் வேறு வழியில்லாமல் கமலையும் கருவாட்டுக்கூடைகளையும் ஏற்றிக்கொண்டு மூக்கை கர்ச்சீப்பால் மூடிக்கொண்டு ஓட்டும் காட்சிகள் மகா ரகளை. கவுண்டர் சொல்வது “மனோ யார் வந்திருக்கா பாரு. கருவாடு வந்திருக்கு”!!!
கமல் குஷ்புவை Eve Teasing செய்துகொண்டே இருப்பார். அப்புறம் காதலாகி கசிந்துருகி எல்லாம் நிகழ்ந்தாலும் பிரதானமாக படம் நெடுகிலும் விரவியிருப்பது நகைச்சுவையே.
உடம்பு முழுவதும் கட்டுகள் போட்டு மருத்துவ மனையில் கமல் படுத்திருக்க அதைச் சாக்காக வைத்து மருத்துவர் வெண்ணிற ஆடை மூர்த்தி குஷ்புவிடம் பண வசூல் வேட்டையாடுவதைப் பார்த்து “என்ன இப்படி கற கறன்னு கறக்கிறாரே” என்று கமல் பொருமுவார். முகமூடியை கழட்டி வைத்து பேசிக்கொண்டிருக்கையில் குஷ்பு வருவது தெரிய வர நர்ஸ்ஸிடம் “சீக்கிரம் மூடுங்க” என அவர் நெஞ்சின் குறுக்காகக் கைகளை வைத்துக்கொள்ள “அட. மொகத்தை மூடுங்க” என்பார். நர்ஸ் இப்போது முகத்தையே மூடிக்கொள்ள “அய்யோ என் மொகத்த மூடுங்க. என்ன ஆஸ்பத்திரிடா இது” என்று நொந்து போவார் கமல். சிரித்துச் சிரித்து வயிற்றுவலியே வந்துவிடும்.
அக்காட்சியின் இறுதியில் கமலை முத்தமழையால் குஷ்பு நனைத்துக்கொண்டேயிருக்க - அப்படியே ஸ்ரெட்சர் ஓடி பாடலுக்கான செட்டில் நுழைய பிரம்மாண்ட சிலந்தி வலையில் சிலந்தி மனிதன் போல ஆடையணிந்து கமல் பறந்து சென்று ஒட்டிக்கொள்வார். பாலுவும் ஜானகியும் மகா இனிமையாக இந்தப் பாடலைப் பாடியிருக்கிறார்கள். கமலின் காதல் சேஷ்டைகள் எல்லாமே எதற்கு அவரைக் காதல் இளவரசன் என்று சொல்கிறோம் என்பதை நிரூபிப்பன. காதல் காட்சிகளில் இயல்பாக நடிப்பதில் அவரை அடித்துக்கொள்ள இன்றுவரை ஆளில்லை என்பதுதான் நிஜம். (சூர்யா, விஜய், அஜீத் இவர்களெல்லாம் கதாநாயகிகளை கன்னத்தில் முகர்ந்து விட்டு விலகிவிடுவார்கள்.)
பாலுவும் கமலும் எந்த அளவு ஈருடல் ஓருயிராக இருப்பவர்கள் என்பதற்கு இப்பாடலும் அத்தாட்சி. பாடலின் ஆரம்ப பல்லவியே சாட்சி. “சிங்கார வேலாஆஆஆஆ” என்று பாலு முடிப்பதை கமல் எப்படி நடித்திருக்கிறார் என்று பார்த்தால் புரியும. காதல் இளவரசன் அல்ல - காதல் ராட்சஸன்!
இளையராஜாவின் இனிமையான இசை, மெட்டு, காதில் தேனாகப் பாயும் குரல்கள், கண்களுக்குக் குளிர்ச்சியான படமாக்கம் என - நம்மைக் கனவுலகில் சஞ்சரிக்கச் செய்யும் பாட்டு இது. இனி பாடல்.
இன்னும் என்னை என்ன செய்யப் போகிறாய்
அன்பே அன்பே
என்னைக் கண்டால் என்னென்னவோ ஆகிறாய்
முன்பே... முன்பே...
கைகள் தானாய் கோர்த்தாய்
கட்டி முத்தம் தேனாய் வார்த்தாய்
இன்பம் இன்பம் சிங்கார லீலா...
இன்னும் என்னை என்ன செய்யப் போகிறாய்
அன்பே அன்பே
என்னைக் கண்டால் என்னென்னவோ ஆகிறாய்
முன்பே... முன்பே...
பாடி வரும் வான் மதியே
பார்வைகளின் பூம்பனியே
தேவ சுக தேன் கனியே
தேவ சுக தேன் கனியே
மோக பரிபூரணியே
பூவோடு தான் சேர இளங் காற்று போராடும் போது
சேராமல் தீராது இடம் பார்த்து தீர்மானம் போடு...
புதுப்புது விடுகதை தொடத் தொட தொடர்கிறதே....
சேராமல் தீராது இடம் பார்த்து தீர்மானம் போடு...
புதுப்புது விடுகதை தொடத் தொட தொடர்கிறதே....
இன்னும் என்னை என்ன செய்யப் போகிறாய்
அன்பே... அன்பே...
என்னைக் கண்டால் என்னென்னவோ ஆகிறாய்
என்னைக் கண்டால் என்னென்னவோ ஆகிறாய்
முன்பே... முன்பே...
உன்னை சேர்த்தாள் பாவை இன்னும் இங்கு ஏதோ தேவை
சொல்லு சொல்லு சிங்கார வேலா....
உன்னை சேர்த்தாள் பாவை இன்னும் இங்கு ஏதோ தேவை
சொல்லு சொல்லு சிங்கார வேலா....
தேன்கள் இதை தூதுவிடும்
நாயகனே மாயவனே
நூலிடையை ஏங்க விடும்
நூலிடையை ஏங்க விடும்
வானமுத சாதனனே
நீ தானே நான் பாடும் சுகமான ஆகாச வாணி
பாடாமல் கூடாமல் உறங்காது ரீங்காரத் தேனி
தடைகளை கடந்து நீ மடைகளை திறந்திடவா
நீ தானே நான் பாடும் சுகமான ஆகாச வாணி
பாடாமல் கூடாமல் உறங்காது ரீங்காரத் தேனி
தடைகளை கடந்து நீ மடைகளை திறந்திடவா
இன்னும் என்னை என்ன செய்யப் போகிறாய்
அன்பே அன்பே
என்னைக் கண்டால் என்னென்னவோ ஆகிறாய்
முன்பே... முன்பே...
கைகள் தானாய் கோர்த்தாய்
கைகள் தானாய் கோர்த்தாய்
கட்டி முத்தம் தேனாய் வார்த்தாய்
இன்பம் இன்பம் சிங்கார லீலா...
இன்பம் இன்பம் சிங்கார லீலா...
இன்னும் என்னை என்ன செய்யப் போகிறாய்
அன்பே அன்பே
என்னைக் கண்டால் என்னென்னவோ ஆகிறாய்
முன்பே... முன்பே... அன்பே...


0 comments:
Post a Comment