Thursday, October 19, 2006

சலங்கை ஒலி - நாத விநோதங்கள் நடன சந்தோஷங்கள்

Image and video hosting by TinyPic
சலங்கை ஒலி படம் இருபது வருடங்களாகியும் இன்னும் விடாத ஒரு மாபெரும் பிரமிப்பு. எத்தனை முறை பார்த்திருப்பேன் என்பதற்கு கணக்கே இல்லை. பாலகிருஷ்ணன் என்ற அந்த பாத்திரத்தின் யதார்த்த பிரதிபலிப்பை கமலைத் தவிர யாரும் செய்திருக்க முடியாது என்று துண்டு போட்டுத் தாண்டிச் சொல்லக் கூடிய அளவிற்கு ஒரு ஆக்ரோஷமான நடிப்பை அவர் கொடுத்திருக்கிறார்.

என்ன முயன்றாலும் பாடகரையும் நடிகரையும் பிரித்துப் பார்க்கவே முடியாத திண்டாட்டம் பாலு கமலுக்குப் பாடுகையில் அடிக்கடி நிகழும் ஒன்றுதான் என்றாலும் அப்படிப் பார்க்கக்கூடிய ஒரு சதவீத வாய்ப்பையும் இந்தப் படத்தில் இருவரும் சேர்ந்து நமக்குக் கிட்டாமல் செய்திருக்கிறார்கள். யார் யாரை விஞ்சியது என்று பந்தயமோ பட்டிமன்றமோ நடத்தும் அளவிற்கு ஒருவருக்கொருவர் சளைக்காத பங்களிப்பு பாலுவிடமிருந்தும் பாலுவாக நடித்த கமல்ஹாஸனிடமிருந்தும்.

குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய துடுக்கு நடிப்பைத் தந்து பாடி நன்றாக நடனமும் ஆடிய ஷைலஜாவை சென்றமாதம் சந்திக்க நேர்ந்தபோது அவரது அபாரமான அமைதியைக் கண்டு திகைத்துப் போனேன். ஆனால் பாடல் என்று வந்துவிட்டால் தங்கை அண்ணனைப் போலவே சளைக்காது பாடுகிறார். இன்னும் அதே உச்ச ஸ்தாயிக் குரலில் பாடுகிறார். அதையெல்லாம் விரிவான பதிவுகளில் பின்பு சொல்கிறேன்.

படத்தில் மாதவியாக வரும் ஜெயப்பிரதா மாதிரி ஒரு உந்துகோல் கிடைக்காமல் பாலகிருஷ்ணன் மாதிரியான எத்தனையோ கலைஞர்கள் சந்தர்ப்பங்கள் கிட்டாது வீணாய் போகிறார்கள்! அம்மாதிரி கலைஞர்களுக்கு வாய்ப்புகள் கிடைத்து வெளிச்சத்திற்கு வரவேண்டும் என்றும் அவர்களுக்கெல்லாம் தோல்விகண்டு துவளாத பாலு.. பாலகிருஷ்ணனின் விடாமுயற்சியும் மனோதிடமும் கிட்டட்டும் என்றும் இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.

டெல்லியில் நடைபெறும் அகில இந்திய கலை நிகழ்ச்சிக்கான அழைப்பிதழைப் புன்முறுவலுடன் கமலிடம் நீட்டும் ஜெயப்ரதா, அதை ஒவ்வொரு பக்கமாகப் புரட்டி பெரிய பெரிய கலைஞர்களின் நிகழ்ச்சி நிரலைப் பார்த்து ஆஹாகாரம் செய்து வருபவர் ஒரு பக்கத்தில் தன்னுடைய படத்தையே 'பாலகிருஷ்ணனின் பரதநாட்டியம்' என்ற குறிப்போடு பார்த்து படித்து வாயடைத்துப் போய் எதிர்பாராத அந்த மாபெரும் இன்ப அதிர்ச்சியில் திண்டாடித் திகைத்து - வார்த்தைகள் தோற்கும் தருணங்களில் ஒன்றான அந்தத் தருணத்தில் வெட்டியாக வசனங்களைக் கொட்டாது - உணர்வுப் பூர்வமாக கண்ணீர் பெருக ஜெயப்ரதாவின் கையைச் சட்டென்று பற்றி அழுந்த முத்தமிட்டு - நெஞ்சம் தாங்காது வெடிக்கச் செய்துவிடுமோ என்ற சந்தோஷத்தை தலை உயர்த்தி அண்ணாந்து வெடித்துச் சிரித்து வெளியேற்றுவாரே - கமலின் ஒவ்வொரு அணுவும் இயைந்து நடித்திருக்கும் அந்தக் காட்சியில் - நிகரே இல்லாத அபூர்வ நடிகர் அவர் என்பதை நிரூபிக்க என்ன வேண்டும்? இது மாதிரியான அற்புதக் காட்சிகள் படம் முழுதும் ஏராளமாக விரவியிருக்கின்றன. எதை எடுப்பது எதை விடுவது என்று தெரியாமல் திணறுகிறேன்.
Image and video hosting by TinyPic
அதைத் தொடர்ந்து வரும் இந்தப் பாடல் காட்சியும் பாடல் முடிந்ததும் ரசிகர் கூட்டத்தில் சிக்கித் திணறுவது போல கமலும் ஜெயப்ரதாவும் நடிப்பதும் - அருமையான காட்சிகள்.

இசைஞானிக்கு தேசிய விருதை வாங்கித் தந்த படம்!

பிரமிப்பில் வார்த்தைகள் கிடைக்காது திணறுவோமே. சலங்கை ஒலி படத்தைப் பற்றி நிறைய எழுதவேண்டும் என்பதற்காகவே இத்தனை நாட்களாக பதியாமல் இருந்து இனியும் தாமதிக்க முடியாது என்ற கட்டத்தில் அதைப் பற்றிய பிரமிப்பு விலகாதவரை விரிவாக எழுதுவது சாத்தியம் இல்லை என்பதையும் உணர்ந்து கொண்டு ஆனந்தமாகத் தோற்றுப் போவதில் எனக்குச் சந்தோஷமே!

சலங்கையின் ஒலி என் காதுகளில் இன்னும் பல வருடங்கள் கேட்டுக்கொண்டே இருக்கும்!

வாஹர்த்தாவிவ சந்த்ருப்தெள வாஹர்த்தப் ப்ரதிபத்தயே
ஜகதப்பிதரம் வந்தே பார்வதீ பரமேச்வரம்
வந்தே பார்வதீப ரமேஷ்வரம்.

நாத விநோதங்கள் நடன சந்தோஷங்கள்
பரம சுகங்கள் தருமே
அபிநயம் காண்பதும் அதில் மனம் தோய்வதும்
வீடு பேறு பெறுமே
பாவங்களே பழகுவதே
கானங்களே கலையசைவே

பாவங்களே பழகுவதே
கானங்களே கலையசைவே
உடலோடு உயிர்வந்து இணைகின்ற நயமிது

நாத விநோதங்கள் நடன சந்தோஷங்கள்
பரம சுகங்கள் தருமே
ஆஆஆஅ ஆஆஆஅ ஆஆஆஆ

கைலை நாதன் நடனம் ஆடும் சிவரூபம்
பெளர்ணமி நேரம் நிலவில் ஆடும் ஒளி தீபம்
கைலை நாதன் நடனம் ஆடும் சிவரூபம்
பெளர்ணமி நேரம் நிலவில் ஆடும் ஒளி தீபம்
நவரச நடனம்
ஜதி தரும் அமுதம்
நவரச நடனம்
ஜதி தரும் அமுதம்
அவன் விழியசைவில் ஏழு புவியசையும்
பரதம் என்னும் நடனம்
பிறவி முழுதும் தொடரும்
பரதம் என்னும் நடனம்
பிறவி முழுதும் தொடரும்
விடி ஒளி பொழியும் அதில் பகை அழியும்
விடி ஒளி பொழியும் அதில் பகை அழியும்
சிவனின் நடனம் உலகாளும்

திரனதிரனனன தகிட தகிடதிமி
திரனதிரனனன நடனம்!
திரனதிரனனன தகிட தகிடதிமி
திரனதிரனனன நாட்டியம்!

உலகம் சிவனின் தஞ்சம்
அவன் பாதமே பங்கஜம்
நர்த்தனமே சிவகவசம்
நடராஜ பாத நவரசம்
திரனனன திரனனன திரதிரதிரதிரதிரதிரதிரதிர

நாத விநோதங்கள் நடன சந்தோஷங்கள்
பரம சுகங்கள் தருமே
அபிநயம் காண்பதும் அதில் மனம் தோய்வதும்
வீடு பேறு பெறுமே


16 comments:

சுல்தான் said...

இதெல்லாம் படமில்லை இயல்பான நடிப்பு எப்படி இருக்கும் என்ற பாடம்.

ஷைலஜாவின் முன்னே ரகம் ரகமா பிரித்து ஆடுவதென்ன?
அதிலே கடைசியிலே காப்பி டம்ளர் பறப்தென்ன?
'ரெண்டு தப்பு' காட்சியென்ன? அம்மாவின் முன்னால் ஆடியபின் கோபக்கார மாமா லட்டு தருவதென்ன?
அந்த நாட்டியத்தில் ராஜலட்சுமியையும் இணையாகக் காட்டி அசத்துவதென்ன?
குடிகார டான்ஸ் மாஸ்டர் பீஸ்?
நடனம் கற்றுக்கொள்ள மொழி தெரியாமல் நடன கேள்வியும் பதிலும்,
சரத்பாபு மாமனாரை காலில் மிதித்து நாட்டியம்,
தாயை தவறாக நினைக்கும் ஷைலஜாவின் கோபம்,
திவசம் பார்த்து கமல் திடுக்கிடுவது,
ராமையா... நான் சிவய்யாய்யா என்பவரின் தீர்த்தம் கிடைக்குமிடம் சொல்லும் இயல்பு,
தக தக தா... தக தா... தக தக தக தா... என அழைத்து வரச் சொல்லுதல்,
அதையெல்லாம் விட கிணற்றில் ஒற்றைக்கால் நடனமும் அந்தப்பாட்டும்,
ஷைலுவின் கிளைமேக்ஸ் நடனத்தில் ஜெயப்பிரதாவிடம் கண்க்கு சரியா என்று கண்ணால் கேட்பதும்.
இன்னும் இன்னும் எவ்வளவு!!!

படமாய்யா அது. நடிப்புக்கு பாடம்.

நான் ஒரு நாற்பது தடவையாவது பார்த்திருப்பேன் இது வரை.

சிறில் அலெக்ஸ் said...

அருமையான பாடல் அருமையான படம். கமல் ஏன் இன்னொரு படம் நடனம் அடிப்படையில் பண்ணலைன்றதுக்கு இந்தப் படத்தின் தரமே காரணமாயிருக்கலாம்.

சைலஜா ரெம்ப நல்லா நடிச்சிருப்பாங்க எல்லா பாடல்களும் வைரமுத்துவின் வரிகளும் எனக்கு மிகவும் பிடிக்கும்.

துளசி கோபால் said...

சுந்தர்,

நேத்துதான் இந்தப் பாட்டை நினைச்சேன். கமல் ஹாசனின் டாப் 50 பாடல்கள்னு ஒரு டிவிடி
வாங்கிவந்தோம். வீட்டுக்கு வந்து போட்டுப் பார்த்தப்பதான் தெரிஞ்சது அதுலே சலங்கை ஒலி
இல்லவே இல்லைன்னு. அடடான்னு போச்சு.
ஆனா வாழ்வே மாயம் படத்துலே 'வந்தனம்' பாட்டு பார்த்தேன். அழகான ஸ்ரீப்ரியா, மூக்கு ஆபரேஷன்
ஆகாத ஸ்ரீதேவி, ஒல்லிக் கமல்ன்னு எல்லாம் அழகோ அழகு.

இப்ப ஸ்ரீதேவியை பார்த்தா ரொம்ப'ச்சாலு'வா இருக்கு. பழைய பால்மணம் மாறாத இன்னொசென்ஸ் இல்லை.
சரி, போட்டும். மனுஷர்கள் வளர வளர மாறிடுவாங்கதானே?

"வற்றாயிருப்பு" சுந்தர் said...

சுல்தான்

வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.

பெரிய பட்டியலே போட்டுவிட்டீர்கள். நீங்கள் குறிப்பிட்ட ஒவ்வொரு காட்சிக்குமே தனித்தனி பதிவு போடுமளவிற்கு விஷயமிருக்கிறது. இவ்வளவு நினைவு வைத்துச் சொல்லியிருக்கிறீர்கள் - மகிழ்ச்சி.

"வற்றாயிருப்பு" சுந்தர் said...

சிறில்.

//ஏன் இன்னொரு படம் நடனம் அடிப்படையில் பண்ணலைன்றதுக்கு இந்தப் படத்தின் தரமே காரணமாயிருக்கலாம்//

அதேதான். எல்லாம் சரியாய் அமைவது அடிக்கடி நடக்கக் கூடிய விஷயமில்லை. அந்த மட்டில் இந்தப் படம் நமக்குக் கிடைத்ததற்கே நாம் அதிர்ஷ்டம் செய்திருக்கவேண்டும். கமலுக்கு - ஒரு மிகப்பெரிய மைல் கல் - கமலால் மட்டுமே எட்ட முடியும் மைல் கல்.

நன்றி.

"வற்றாயிருப்பு" சுந்தர் said...

துளசிக்கா

//கமல் ஹாசனின் டாப் 50 பாடல்கள்னு //

நூற்றுக்கணக்குல இருக்கற படங்கள்லயே முதல் 50-ல வர்லைங்கறீங்க. பாலுவின் 36000-த்துல டாப் 1000 போட்டு அதுலயும் இது வர்லைன்னா ஆச்சரியப்படக்கூடாது போலருக்கு. பாடல்கள் இருக்கட்டும்.

கமல் பொருத்தவரை என்னுடைய டாப் பட்டியல்ல முதல் நாலு,

1. மகாநதி
2. குருதிப்புனல்
3. சலங்கை ஒலி
4. குணா

அந்த அம்பதுல நம்மாளு பாடினது நாப்பது இருக்குமே! எவ்வளவு இருந்தாலும் நேரம் கிடைச்சா ஒரு பட்டியல் அனுப்புங்க. எங்கிட்ட இருக்கற கமல்-பாலு பட்டியலோட சரிபார்த்துக்கறேன்! :-)

வாழ்வே மாயத்தை நினைவு படுத்தின உங்களுக்கு "வந்தனம்.. என் வந்தனம்". அதும் மத்ததும் அடுத்து வரிசைல காத்துக்கிட்டுருக்கு. சீக்கிரம் வந்துடும்! :)

நெம்ப தேங்க்ஸ்க்கா!

"வற்றாயிருப்பு" சுந்தர் said...

அக்கா.

இன்னொண்ணு சொல்ல மறந்துட்டேன். கொசு வர்த்தி சுத்தி ரொம்ம்ம்ப நாளாச்சுல்ல? அதனால ஒரு குட்டிப் பதிவு போடலாம்னு எழுதிக்கிட்டிருக்கேன். எதப்பத்தின்னு ஒரு க்ளூ கொடுக்கவா? ஒர்ரூவாய்! :-) இப்ப உங்களுக்கு கொசுவத்தி சுத்த ஆரம்பிச்சிருச்சா. நாராயண நாராயண.. :)

ஜோ / Joe said...

சுந்தர்,
கமல் என்னும் மாபெரும் கலைஞனின் அற்புதமான படம் .எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பதில்லை.பதிவுக்கு மிக்க நன்றி!

கோவை ரவீ said...

சுந்தர், நேற்று தான் உங்க ட்ராப்ட்ல சலங்கை ஒலி என்று தலைப்பு பார்த்து எந்த பாட்டு போடபோறீங்க என்று என் கிட்ட இருக்கிற கொஞ்ச முடியையும் பிச்சிக்கிட்டேன். ஒரே இரவுல பாட்டு வரிகள் எழுதி அதற்கு விளக்கம் எழுதி கலக்கீட்டிங்க சார். இன்று காலை வேலைக்கு வந்தவுடன் (7.30 அ.ம்.) உங்க பதிவு பார்ர்து ஆச்சரியப்பட்டு உடனே மறுமொழி எழுதறேன்.

அப்புறம்

//ஷைலஜாவை சென்றமாதம் சந்திக்க நேர்ந்தபோது அவரது அபாரமான அமைதியைக் கண்டு திகைத்துப் போனேன். ஆனால் பாடல் என்று வந்துவிட்டால் தங்கை அண்ணனைப் போலவே சளைக்காது பாடுகிறார். இன்னும் அதே உச்ச ஸ்தாயிக் குரலில் பாடுகிறார். அதையெல்லாம் விரிவான பதிவுகளில் பின்பு சொல்கிறேன்//

நீங்க சொன்னது போல திருமதி சைலஜா சுதாகர் ஆழ்கடல் அமைதிதான் போங்கள் நூறு சதவீதம் உண்மை. படத்துல வர்ற அந்த கருப்பு கலர் சுரிதார் எனக்கு நன்றாக நினவு வருகிறது. ஏனென்றால் அந்த படப்பிடிப்பு முடிந்த கையோட ராகதேவன் இளையராஜா சாரின் திருச்சி ராஜகோபுர இன்னிசை நிகழ்ச்சி கோவையில் நடந்த போது பாலுவுடன் அவரை சந்த்தித்து புகைப்படம் எடுத்துகொண்டேன். அந்த அற்புதமான சந்திப்பு என் வாழ்க்கையில் மறக்கமுடியாத ஒன்று. இதை உங்களுக்கு தெரிவிதுக்கொள்வதில் எனக்கு ஆனந்தமாக இருக்கிறது.
நீங்க சொன்னமாதிரி ஒரு நல்ல பாட்டுக்கு உடனே ரெஸ்பான்ஸ் கிடைக்கும் என்று சொன்னது இந்த பதிவில் அதுவும் ஒரே இரவில் பல மறுமொழி கண்டது எனக்கு மகிழ்ச்சியே. அது என்ன புது பதிவு எனக்கும் தான் சொல்லுங்களேன் நானும் தெரிஞ்சுக்குவேன்ல..

கோவை ரவீ said...

மன்னிக்கவும் சுந்தர், உங்க ட்ராப்ட் பதிவில் வேற படப்பெயர் பார்த்து தவறுதலாக சலங்கை ஒலி என்று குறிப்பிட்டுவிட்டேன் தவறுக்கு மன்னிக்கவும்.

Chandravathanaa said...

நல்ல பாடல்.
எனக்குப் பிடித்த பாடல்களில் ஒன்று.
படமும் பிடித்த படமே

"வற்றாயிருப்பு" சுந்தர் said...

ஜோ

//எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பதில்லை//

ஆமாங்க. அதான் ஆச்சரியம். பழைய படங்களைத் திருப்பிப் பாக்கும்போது எவ்வளவு நல்ல படமாக இருந்தாலும் சில காட்சிகளை ஓட விட்டுத் தாவறது வழக்கம்தான். ஆனா இதுல ஒரு காட்சிய கூட விட்டுடறதுக்கு மனசு வராது. ஒவ்வொரு காட்சியும் நுணுக்கமாகச் செதுக்கப்பட்ட சிற்பம் இது.

நன்றி.

"வற்றாயிருப்பு" சுந்தர் said...

வாங்க ரவீ,

//ஏனென்றால் அந்த படப்பிடிப்பு முடிந்த கையோட ராகதேவன் இளையராஜா சாரின் திருச்சி ராஜகோபுர இன்னிசை நிகழ்ச்சி கோவையில் நடந்த போது பாலுவுடன் அவரை சந்த்தித்து புகைப்படம் எடுத்துகொண்டேன்//

கொடுத்துவச்ச ஆத்மா நீங்க. இசைஞானியோட நிகழ்ச்சியையும் பாத்துருக்கீ்ங்க. அடுத்த தடவை சென்னை வர்றப்போ அவரைச் சந்திக்க முடியுமான்னு பாக்கணும்.

"வற்றாயிருப்பு" சுந்தர் said...

வாங்க சந்திரவதனா,

வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றிகள்.

V.P.Jaiganesh said...

சலங்கை ஒலி!!
ஒரு கலைஞன்(கமல்), ஒரு கவிஞன்(சரத் பாபு), ஒரு ரசிகை(ஜெயப்ரதா) இவர்களின் தலைமுறைகள் தாண்டிய நட்பினை இசையாலும் உணர்வாலும் எடுத்துச்சொன்ன படம். ஐம்பது முறை பார்த்தாலும் அலுக்காத காவியம். ஒரு சிறு குறையும் இல்லாத முழுமையான படம். இயக்குநர் கே.விஸ்வநாத் அவரிகளின் படங்களின் சிறப்பே, பார்ப்பவர்களை கதையின் பாத்திரங்களின் மிக அருகாமையில் சென்று அமர வைக்கும் அளவிற்கு ஜீவனுள்ள மனிதர்களைத்திரையில் வடிப்பது தான். இந்த படத்தில் வரும் பாலகிருஷ்ணன் போல ஒரு நண்பனோ இல்லை சரத் பாபுவின் பாத்திரம் போன்றொரு நண்பனோ நமக்கு இருக்க மாட்டார்களா என்று பார்ப்பவர்களை முதலில் ஏங்க வைப்பதும், படத்தின் இறுதியில் அவர்கள் நம் குடும்பத்தினர் எனும் எண்ணத்துடன் திரை அரங்கில் இருந்து நம்மைஈரவிழிகளுடன் அனுப்பிய கே.விஸ்வநாத் அவர்களுக்கு ஒரு கோடி நன்றி.
படத்தின் இறுதியில் வருவது போல்,
உண்மையான கலைக்கு மரணம் இல்லை. சலங்கை ஒலி அதற்கு ஓர் உதாரணம்.

கோவை ரவீ said...

//கொடுத்துவச்ச ஆத்மா நீங்க. இசைஞானியோட நிகழ்ச்சியையும் பாத்துருக்கீ்ங்க. அடுத்த தடவை சென்னை வர்றப்போ அவரைச் சந்திக்க முடியுமான்னு பாக்கணும்.//

ஒரு தடவை இல்லை சுந்தர் இரண்டு, மூன்று முறை பார்த்திருக்கிறேன். ஒரு தடவை நிகழ்ச்சியில் ஒரு பாடலுக்கு எப்படி இசையமைக்கிறார்கள் என்று ஸ்டேஜில் செய்து காண்பித்தார்கள். அது எந்த பாடல் என்று பிறகு வேறொரு பதிவில் நிச்சயம் சொல்கிறேன் (அந்த நிகழ்ச்சி எனக்கு மறக்கமுடியாதது) . அது வரைக்கும் சஸ்பென்ஸ்.

Followers

பகிர்க